ஒரு பெரிய காட்டில் ஒரு சிங்கம் ஒன்று குகையில் வசித்து வந்தது. அது அங்குள்ள விலங்குகளை வேட்டையாடி உயிர் வாழ்ந்து வந்தது.அந்த காட்டில் காட்டெருமை, மான், குரங்கு மற்றும் பல
விலங்குகள் உலாவி வந்தன.
ஒரு நாள் அந்த சிங்கம் ஒரு பெரிய காட்டெருமையை வேட்டையாடி விட்டு அதிலுள்ள இறைச்சியை வயிறு முட்ட சாப்பிட்டு முடித்த கையோடு நல்ல உறக்கத்தில் ஆழ்ந்தது.
அப்போது ஒரு சுண்டெலி சிங்கத்தின் முதுகைப் பார்த்து அதனை பாறங்கள் என்று நினைத்து அதன் மேல் விளையாட ஆரம்பித்தது. எனவே சிங்கத்தின் தூக்கம் கலைந்தது. மிக்க கோபம் அடைந்த சிங்கம் , ” உன்னை என்ன செய்யப் போகிறேன் பார்” என்று
சொல்லி சுண்டெலியை தன்னுடைய வலிமையான காலால் மிதிக்க ஆரம்பித்தது.” நீ என் தூக்கத்தை கலைத்து விட்டாய் . உன்னை என்ன செய்கிறேன் பார். உன்னை என் வாயில் போட்டு மென்று விடுகிறேன்” என்று சொல்லி வாயை பெரிதாக திறந்தது.
எலி பயத்தால் நடுங்கியது. அது தன் உயிரை கையில் பிடித்துக் கொண்டு, “சிங்க ராஜாவே, நான் பெரிய தவறு செய்து விட்டேன். என்னை ஒன்றும் செய்து விடாதீர்கள். உங்கள் உடம்பை பெரிய கல் என்று நினைத்து விளையாடிவிட்டேன். என்னை மன்னித்து விட்டு விடுங்கள். அப்படி மன்னித்தால் உங்களுக்கு ஆபத்து ஏற்படும் சமயம் நான் நிச்சயமாக உங்களுக்கு உதவி செய்வேன்” என்றது.
அதைக் கேட்டு சிங்கம் ஏளனமாக சிரித்தது.” நீ என் சுண்டு விரல் அளவு கூட இல்லை, நீ போய் எனக்கு உதவுவதா? நான் மலை போன்று கம்பீரமானவன். நீயோ ஒரு துரும்பு மாதிரி இருக்கின்றாய். நீ எனக்கு எப்படி உதவி செய்ய முடியும்? நான் இப்பொழுது அதிகம் சாப்பிட்டு விட்டு மிகவும் அசதியாக இருக்கின்றேன். எனவே நீ பிழைத்து போ, அற்பனே” என்று சொல்லி எலியை விட்டது.
தப்பித்தோம் பிழைத்தோம் என்று எலி ஓடி தன் இடத்தில் ஒளிந்து கொண்டது.
ஒரு நாள் சிங்கம் வழக்கம் போல வேட்டையாட காட்டிற்கு சென்றது. அங்கே வேடன் ஒருவன் வலை விரித்திருப்பது பார்க்காமல் அதில் மாட்டிக் கொண்டது. எல்லாவித முயற்சி செய்தும் ,சிங்கம் அந்த வலையில் இருந்து தப்பிக்க முடியவில்லை.எனவே அது பயங்கரமாக கர்ச்சனை செய்தது. அந்த கர்ச்சனையை பொந்தில் இருந்த எலி கேட்டது. உடனே ஓடி வந்து தன் கூர்மையான பற்களால் அந்த வலையை கடித்து, சிங்கத்தை விடுவித்தது. சிங்கம் மிக்க சந்தோஷம் அடைந்தது.
“என்னை மன்னித்து விடுங்கள் எலியாரே. நான் உன்னுடைய சின்ன உருவத்தைப் பார்த்து கேலி செய்தேன். ஆனால் எலியாரே, நீர் தான் என் உயிரை காப்பாற்றி இருக்கிறீர்கள். இந்த உதவியை நான் ஒரு போதும் மறக்க மாட்டேன்” என்று கூறியது.
சிங்கமும், எலியும் நண்பர்களாக தத்தம் இருப்பிடத்திற்கு சென்றன.
எனவே குழந்தைகளே ஒருவருடைய உருவத்தைப் பார்த்து ஒரு நாளும்
கேலி செய்யக் கூடாது. உருவம் சிரியதாக இருந்தாலும்கூட நிறைய திறமைகள் ஒருவருடன் மறைந்திருக்கும். எனவே எல்லோருடனும் அன்பாகவும், மரியாதையுடனும் பழக வேண்டும்.
குமுதம் சதாசிவம்
(Kumudam Sadasivam – Auckland)