மரியாதை ராமனின் அறிவையும், சாதுரியமாக பேச்சையும் உலகமே அறிந்திருந்தது.
இதை அறிந்த பக்கத்து ஊர் ராஜா மரியாதை ராமன் பெரிய அறிவாளி இல்லை , அவன் ஒரு முட்டாள் என்று எல்லோருக்கும் நிருபிக்க நினைத்தான்.
அவனை தன் ஊருக்கு வருமாறு ஒரு கடிதம் அனுப்பினான். அதில் நீ உங்கள் ஊரில் வேண்டுமானால் அறிவாளியாக நினைக்கலாம் ஆனால் எங்கள் ஊருக்கு வந்தால் உங்ஙளுடைய அறிவு
ஒரு கழுதைக்கு நிகரானது என்பதை எங்கள் ஞானிகள் நிறுபிப்பார்கள், நீங்கள் சவாலை ஏற்றுக் கொண்டு போட்டிக்கு வரத்தயாரா? என்று எழுதி இருந்தது.
அரசருடைய கடிதம் பார்த்த மரியாதை ராமனுக்கு ஒரு சந்தேகம் வந்தது.அரசருடைய நோக்கம் தன்னை மட்டம் தட்ட வேண்டும் என்பதே என்று புரிந்து கொண்டான். எனினும் அங்கு போய் என்னதான் நடக்கின்றது என்று பார்த்து விடலாம் என்று புறப்பட்டான்.
மரியாதை ராமன் தன் கழுதையை கூட்டிக் கொண்டு அரண்மனைக்கு சென்றான்.அரசன் மிகவும் குழப்பம் அடைந்தார். எதற்காக இந்த மரியாதை ராமன் தன்னுடன் கழதையை கூட்டிக் கொண்டு வந்தான் என்று நினைத்து மிக்க ஆதங்கம் கொண்டார்.அரசன் அவனை அரியணையில் அமருமாறு சொன்னார். அதற்கு மரியாதைராமன் என்னுடைய கழுதையை என்னுடன் வைத்துக் கொள்ள அனுமதி வேண்டும்,அப்பொழுது தான் நான் அமர்வேன் என்றான். அங்கிருந்தவர்கள் எதற்காக கழுதையை தன்னுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டனர்.அதற்கு அவன் என்னுடைய அறிவு இந்த கழுதையிடம் தான் இருக்கிறது என்று சொன்னான். குழப்பமான அரசர் மரியாதைராமன் விரும்பியபடி கழுதையை அவனுடன் வைத்துக் கொள்ள அனுமதித்தார்.
அப்பொழுது ஒரு அறிஞர் உலகத்திலேயே உயர்வானது எது என்று கேட்டார். அதற்கு மரியாதை ராமன் இந்த உலகத்தில் உயர்வானது என் கழுதையின் வியர்வை தான் என்றார். அதைக் கேட்டு அங்கு இருந்தவர்கள் மிகவும் குழப்பம் அடைந்தனர்.அது எப்படி உன் கழுதையின் வியர்வை தான் மிகவும் உயர்வானது? அதற்கு மரியாதைராமன் உலகத்தின் விதியை மாற்றப் போவது ஒவ்வொருவரின் உழைப்பும் , வியர்வையும் மட்டும் தான். ஆனால் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய நலனுக்காக மட்டுமே உழைத்து வியர்வை சிந்துவர். ஆனால் என்னுடைய கழுதை மற்றவர்களுக்காக வியர்வை சிந்தி உழைக்கின்ற பிராணி.எனவே தான் என் கழுதையின் வியர்வை மிகவும் உயர்வானது என்றான்.இந்த பதிலைக் கேட்ட அந்த அறிஞர் அது சரியான பதில் தான் என்று ஒத்துக் கொண்டார்.
அடுத்த அறிஞர் நிலாவின் எடை என்ன என்று கேட்டார்.அதற்கு மரியாதைராமன் ராத்திரி நேரத்துல என் கழுதையின் நிழல் எடை தான் நிலாவின் எடை என்றார்.
“ஓ , அப்படியா, அப்படி என்றால் உன் கழுதையின் நிழலை இந்த தராசில் நிறுத்துப் பார்த்து சொல்லுங்கள் என்றார்.”அப்போது மரியாதைராமன் எதற்காக வீண் சிரமம், இரண்டு தடவை
எடை எடுப்பது? நீங்கள் நிலாவை இந்த தட்டில் வையுங்கள் நான் என்னுடைய கழுதையின் நிழலை அடுத்த தட்டில் வைக்கிறேன் என்றான். இதைக்கேட்டவுடன் அரசன் மரியாதைராமன் இந்த தடவையும் ஜெயித்து விட்டான் என்று புரிந்து கொண்டார்.
அடுத்ததாக ஒரு அறிஞர் இந்த உலகில் எந்த அரசன் நல்ல ஆட்சியாளர் என்று கேட்டார். அதற்கு மரியாதைராமன் என்னுடைய கழுதைதான் என்றார்.இதைக்கேட்ட மக்கள் மிக்க கோபம் கொண்டு எழுந்து நின்று ஆரவாரம் செய்தனர். இவன் வேண்டுமென நம் அரசரை அவமானப் படுத்துகிறான் என்றனர்.அது எப்படி இந்த கழுதைதான் நல்ல ஆட்சியாளர் என்று கேட்டனர்.இந்த உலகில் ஆட்சி செய்யும் அரசர்கள் மற்றவர்களைத் தான் ஆட்சி செய்கிறார்கள் ஆனால் என்னுடைய கழுதை தன்னைத்தானே ஆட்சி செய்யும் திறம் கொண்டது.உதாரணமாக அது பொதி சுமந்து செல்லும் போது அதற்கு கால் வலித்தால் அப்போது கீழே உட்கார்ந்து விட்டால், அதை அரசர் வந்தாலும் அதை எழுப்ப முடியாது.ஆனால் தன்னைத்தானே ஆட்சி செய்யும் என்னுடைய கழுதை நினைத்தால் மட்டுமே அது முடியும் என்றார். அப்பொழுது தான் அரசருக்கு தன் தவறு புரிந்தது. தான் மரியாதைராமனை கழுதையுடன் ஒப்பிட்டாதால் தன் ஒவ்வொரு கேள்விக்கும் கழுதையை முன்னிறுத்தி தன்னை கேவலப்படுத்துகிறார் என்று புரிந்து கொண்டார்.அரசருக்கு மரியாதைராமன் மேல் கோபம் வந்தாலும் ,அவரின் மேல் மதிப்பே அதிகம் வந்தது.எனவே மரியாதைராமனிடத்தில் மன்னிப்புக் கேட்டு, நிறைய பரிசுப் பொருட்களை அவனுக்கு வாறி வழங்கி, அவருக்கு மரியாதை செய்து, ஊருக்கு அனுப்பி வைத்தார்.
எனவே குழந்தைகளே நாம் ஒருவரையும் மனம் நோகும்படி அவமானப் படுத்தக் கூடாது.எல்லோரையும் மரியாதையாக நடத்த வேண்டும்.
குமுதம் சதாசிவம்.
By Kumutham Satasivam – Auckland