கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தக்குடி எனத் தமிழினத்தின் தொன்மையைப் புறப்பொருள் வெண்பாமாலை கூறும், உலகின் முதன் முதலில் தோன்றிய மனிதன் தமிழனே என்பது மானிடவியல் ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும். உலகில் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்புரிமை பெற்ற 192 நாடுகளும் 43 ஆட்சிபுலங்களும் ஆக 235 நாடுகள் உள்ளன.அவற்றில் ஏறத்தாழ நூற்றைம்பத்து நான்கு நாடுகளில் தமிழினம் பரவியுள்ளது. பத்துத் தமிழர்கள் முதல் ஏழு இலட்சத்து ஐம்பதினாயிரம் தமிழர்கள் வரை அந்நாடுகளில் வாழ்கின்றன. அவற்றுள் இருபது நாடுகளில் இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர் வாழ்கின்றனர்.
வாணிகம், வேலைவாய்ப்பு ஆகிய காரணங்களுக்காகத் தமிழர்கள் அயல்நாடுகளுக்குச் சென்றார்கள். சங்க இலக்கியங்களிலும் இது குறித்த செய்தி காணப்படுகிறது. அதனாலன்றோ ஒளவையாரும் திரைகடலோடியும் திரவியம் தேடு என்றார். சாதுவன் வணிகம் செய்யும் பொருட்டு கடல் கடந்து சென்ற குறிப்பு மணிமேகலையில் உள்ளது. ஆங்கிலேயர்கள் மற்றும் பிரெஞ்சுக்காரர்கள் தமிழர்களை அடிமைகளாக்கி அவர் தம் ஆளுகைக்கு உட்பட்ட நாடுகளுக்குக் கூலிகளாக அழைத்துச் சென்றார்கள். தமிழர்கள் நாடடில் ஏற்பட்ட பஞ்சத்தின் காரணமாகவும் அந்நியப் படையெடுப்புகளின் காரணமாகவும் தமிழகத்தை விட்டு பிழைக்கச் சென்றார்கள்.
சிங்கப்பூர், மலேசியா, பினாங்குத்தீவு ஆகிய நாடுகளில் கோயில் கட்டி ஆண்டுதோறும் திருவிழாக்களைச் சிறப்பாக நடத்தி வருகின்றனர். பரப்பளவில் சிறியதான ரியூனியன் தீவில் வாழ்பவர்களுள் பெரும்பான்மை மக்கள் தமிழரே. அவர்கள் பிரெஞ்சுக்காரர்களால் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலிருந்து ஒப்பந்தக் கூலிகளாக அங்கு குடியமர்த்தப்பட்டார்கள். பிரான்சு நாட்டின் ஒரு பகுதியாகக் கருதப்படும் அத்தீவில் வாழும் தமிழர்கள் பிரெஞ்சு மொழியே பேசுகிறார்கள். அவர்கள் தமிழைப் பேசாத போதும் தமிழர் தன் பண்பாட்டுக் கூறுகளை மறவாது இன்றளவும் பின்பற்றி வருகிறார்கள்.
இலங்கையில் வாழும் தமிழர்களில் 95% தொடக்கக்கல்வி முதல் பல்கலைக்கழகம் வரை தமிழிலேயே கல்வி பயில்கின்றனர். புதுச்சேரி, சிங்கப்பூர், மொரிசியசு, மலேசியா, பிஜித்தீவுகள், தென்அமெரிக்கா, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் தமிழ் ஒரு பாடமாக கற்பிக்கப்படுகிறது. சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் தமிழ் ஆட்சி மொழியாக திகழ்கிறது. தமிழைப் பாடமொழியாகப் பயிலவும் தமிழியல் ஆய்வுகளை மேற்கொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தமிழர் தம் நாட்டை விட்டுச் சென்ற போதும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்னும் உயர் நோக்கோடு வாழ்ந்து வருகின்றன. அவர்கள் தொழில் துறையிலும், கல்வித்துறையிலும், கணினித் துறையிலும் காலுன்றி பணியாற்றி வருகின்றார்கள்.
தமிழர் இலங்கை மலேசியா, சிங்கப்பூர் முதலிய நாடுகள் பலவற்றில் உள்ளாட்சி தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்புகளையும் வகித்து வருகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் போன்ற பதவிகளிலும் சிறப்புறத் தொண்டாற்றி வருகின்றனர். இந்தியாவில் மட்டுமின்றி சிங்கப்பூர், மொரிசியசு ஆகிய நாடுகளில் குடியரசுத் தலைவர்களாகவும் தமிழர்கள் தேரந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது தமிழர்க்குப் பெருமை தருகிறது.
“தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவற்கொரு குணமுண்டு” என்பதற்கிணங்க உலகெங்கும் வாழும் தமிழரகள் தங்களது பண்பாட்டு அடையாளங்களை தமிழர்கள் மறவாமலும் மாற்றிக் கொள்ளாமலும் வாழந்து, தமிழுக்கும் தமிழகத்துக்கும் பெருமை சேர்த்து வருகிறார்கள், கணியன் பூங்குன்றனாரின் வாக்கை மெய்பிக்கும் வண்ணம் இன்று உலகத்தோடு ஒட்ட ஒழுக வாழ்வதே தமிழர் குணம்.
By Dr. Lakshman Sockalingam