fbpx
11.6 C
New Zealand
Sunday, November 22, 2026

The Only Sri Lankan Community Newspaper in New Zealand

புலம் பெயர்ந்தவனின் கனவுகள் | யோர்ச் அருளானந்தம் ONZM QSM JP

Must read

SrilankaNZ
SrilankaNZhttps://www.srilankanz.co.nz
ශ්‍රී LankaNZ is a free distributed Sri Lankan Community Newspaper that aims to reach a Sri Lankan population of over 18,000 all over New Zealand. The demand for entertainment in literacy media itself gave birth to ශ්‍රී LankaNZ

முதல் பகுதி….

ஊருக்கும் நாட்டிற்கும் பெரும்சேவையாற்றிய மிகப்பெரிய மனிதனை இழந்துநிற்கின்றோம்…”. மேடையில் இரங்கலுரை வழங்கிய ஒருவர் தழுதழுத்த குரலில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அவரது வலது பக்கத்திலிருந்த மேடையில் தவனின் உயிரற்ற உடல் வைக்கப்பட்டிருந்தது.

எனக்கு தவனைக் கடந்த முப்பத்தைந்து வருடங்களாக தெரியும். நான் ஐரோப்பிய வம்சாவழியைச் சேர்ந்தவள். நான் பாடசாலைப் படிப்பை முடித்துவிட்டு வேலைசெய்யத் தொடங்கிய காலத்தில், தவன் நான் வேலை செய்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தான். தவன் இலங்கையில் இருந்து எமது நாட்டிற்குப் புலம்பெயர்ந்திருந்தான்.

தவன் தனது மனைவியுடனும், இருபிள்ளைகளுடனும் எமது நாட்டில் குடியேறியிருந்தான்.

அந்தக் காலத்தில் எமது, நியூசிலாந்து நாட்டவர்கள் வெளிநாடுகளிலிருந்து குடிபெயர்ந்து வருபவர்களைப் பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை. நாட்டிலும் வேலைவாய்ப்புகள் பெரியளவில் இருக்கவில்லை. அதனால் வெளிநாடுகளிலிருந்து குடிபெயர்ந்து வருபவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைப்பது மிகவும் அரிதாகவே இருந்தது. பல நிறுவனங்கள் குடிபெயர்ந்தவர்களுக்கு வேலை கொடுக்கத் தயங்கின.

அந்தக் காலப்பகுதியில் இலங்கையிலிருந்து குடிபெயர்ந்து வந்தவர்களில் பெரும்பாலானோர் வைத்தியர்களாகவும் பொறியியலாளர்களாகவும் இருந்தனர். ஆனால் அவர்களுக்கு நாட்டிற்கு வந்தவுடன் தங்களது தகுதிக்கேற்ற வேலைவாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால், அநேகமானோர் பீசா கடைகள், பல்பொருள் அங்காடிகள் போன்ற இடங்களில் வேலை செய்து வந்தனர்.

இதற்கு மாறாக, தவன் எமது நாட்டில் குடியேறிய மிகக் குறுகிய காலத்திலேயே எமது நிறுவனத்தில் வேலை பெற்றிருந்தான்   .

ஆரம்பத்தில் தவன் ஆங்கிலத்தில் கதைப்பதை விளங்கிக்கொள்வது எனக்குச் சற்றுக் கஷ்டமாக இருந்தது. அவனுடைய உச்சரிப்பு எனக்குப் புதிதாக இருந்தது. நாட்கள் செல்லச் செல்ல, தவனும் தனது ஆங்கில உச்சரிப்பை எமது நாட்டு உச்சரிப்பிற்கு ஏற்ப மாற்றிக்கொண்டான். நானும் அவனுடைய உச்சரிப்பை விளங்கிக்கொள்ளப் பழகிக்கொண்டேன்.

எமது நிறுவனம் இயந்திரங்களைத் தயாரித்து, பால்மா, வெண்ணெய், சீஸ் போன்றவற்றை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு அவற்றை வழங்கிக்கொண்டிருந்தது.

ஒரு பக்கத்தில் அலுவலகமும், மறுபக்கத்தில் மிகவும் பெரிய தொழிற்சாலையும் அமைந்திருந்தன. அலுவலகத்தில் இயந்திரங்களை வடிவமைக்கும் பணிகளும் நிர்வாக வேலைகளும் நடைபெற்றுக்கொண்டிருந்தன. தொழிற்சாலையில் அந்த வடிவமைப்புகளுக்கு ஏற்ப இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டுக்கொண்டிருந்தன.

தவன் இயந்திரங்களை வடிவமைக்கும் பொறியியலாளனாக வேலை செய்தான். அவனது வேலை அலுவலகத்தில் இருந்தாலும், அடிக்கடி தொழிற்சாலைக்குச் சென்று அங்கு இயந்திரங்கள் தயாரிக்கப்படும் முறையைப் பார்வையிட வேண்டியிருந்தது.

ஆரம்பத்தில் எமது நிறுவனத்தில் வேலைசெய்தவர்கள் தவனைச் சற்று வித்தியாசமாகவே பார்த்தார்கள். தொழிற்சாலையில் வேலைசெய்த தொழிலாளர்களும் அவனுக்கு உரிய மரியாதையைக் கொடுக்கவில்லை.

ஆனால், தவன் எல்லோரிடமும் அன்பாகக் கதைப்பான்; இனிமையாகப் பழகுவான். அவனுடைய இந்தச் சுபாவம் நிறுவனத்தில் வேலைசெய்த அனைவரையும் கவர்ந்தது.

நாட்கள் செல்லச்செல்ல தவனின் திறமையும் ஆளுமையும் வெளிப்படத் தொடங்கின. அவன் வேலைசெய்யும் விதமும், எல்லோருடனும் பழகும் முறையும் அனைவரையும் கவர்ந்தன. காலப்போக்கில் நிறுவனத்தில் வேலைசெய்த அனைவரும் அவனை நேசிக்கத் தொடங்கினர். அவனுக்கு உரிய மரியாதையையும் கொடுக்கத் தொடங்கினர்.

இந்தக் காலப்பகுதியில் தவனுக்கு மூன்றாவது மகனும் பிறந்தான். தவன் தனது குடும்பத்தின் மீது மிகவும் பற்றும் பாசமும் கொண்டிருந்தான்.

இலங்கையிலிருந்து குடிபெயர்ந்து வந்த பலரும், தங்களுடைய பிள்ளைகள் வைத்தியர்களாகவோ பொறியியலாளர்களாகவோ வந்து, பின்னர் இலங்கைப் பெண்ணையோ ஆணையயோ திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனேயே தங்கள் பிள்ளைகளை வளர்த்து வந்தனர். தவனும் அதற்கு விதிவிலக்கல்ல. தனது மூன்று பிள்ளைகளும் வைத்தியர்களாகவோ பொறியியலாளர்களாகவோ வந்து, இலங்கைப் பெண்களைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் அவர்களை வளர்த்து வந்தான்.

நான் இதைக் குறித்து தவனிடம் அடிக்கடி நகைச்சுவையாகக் கூறுவேன்:

“எல்லோரும் வைத்தியர்களாகவும் பொறியியலாளர்களாகவும் வந்துவிட்டால், எங்களுக்குத் தலைமயிர் வெட்டுவதற்கோ, எங்களுடைய குப்பைகளை அகற்றுவதற்கோ ஆட்கள் கிடைக்கமாட்டார்கள். நாங்கள் நீண்ட தலைமயிருடனும், நாற்றமடிக்கும் நகரத்திலும்தான் வாழவேண்டிவரும்!”

எனது பேச்சைக் கேட்டு தவன் சிரிப்பான். ஆனால் அவனுடைய எதிர்பார்ப்பில் எந்த மாற்றமும் இருக்காது.

இலங்கையின் நிலைமை அப்படியாக இருந்திருக்கலாம். அங்கு வைத்தியர், பொறியியலாளர், கணக்காளர் போன்ற தொழில்களுக்குப் படித்தால்தான் நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்ற நிலைமை இருந்திருக்கலாம். ஆனால் எமது நாடு அப்படியல்ல. எந்தத் துறையில் படித்தாலும், திறமையுடனும் முயற்சியுடனும் முன்னுக்கு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

இதைப் புரிந்துகொள்ளாமல், தங்களை மிகவும் படித்த சமூகமாகக் கருதிக்கொண்ட சில இலங்கையர்கள், தங்களுடைய எதிர்பார்ப்புகளையும் கனவுகளையும் தங்கள் பிள்ளைகள்மீது திணித்துக்கொண்டிருந்தார்கள்.

தவனும், தான் பிறந்து வளர்ந்த சமூகத்தின் அந்த எண்ணங்களிலிருந்து முற்றிலும் விடுபட்டவனாக இருக்கவில்லை.

தவனுக்கு தனது பதவியிலும் சமூகத்திலும் உயரவேண்டும் என்ற பேராவல் இருந்தது. அந்தப் பேராவல் அவனை ஓய்வின்றிக் கடினமாக உழைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளியது. பகலில் வேலை; இரவிலும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் சமூகப்பணி என அயராது உழைத்தான்.

அவனுடைய இந்த அயராத உழைப்பு, அவன் நினைத்ததை அடைவதற்கு உதவியது. கடின உழைப்பும், பொறியியலில் அவனுக்கிருந்த அறிவும், முகாமைத்துவத்தில் அவனுக்கிருந்த திறமையும் அவனைப் படிப்படியாக நிறுவனத்தின் உயர் பதவிகளுக்கு உயர்த்தின. சமூகப்பணியில் அவன் காட்டிய அயராத ஈடுபாடும் அவனைச் சமூகத்தில் ஒரு உயர்ந்த நிலைக்குக் கொண்டுசென்றது.

பணமும் பல வழிகளில் அவனைத் தேடி வரத் தொடங்கியது. சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருந்த பலர் அவனுடன் நெருங்கிப் பழகத் தொடங்கினர். தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் எனப் பலருடனான தொடர்புகளும் அவனுக்குக் கிடைத்தன.

தவன் தனது முன்னேற்றத்தைத் தனது குடும்பத்தின் முன்னேற்றமாகவே கருதினான். சமூகத்தில் தனது அந்தஸ்து உயர்வது, தனது குடும்பத்தின் அந்தஸ்து உயர்வதாகவே அவன் நினைத்தான். ஆனால், இதற்காக அவன் செலவிட்டுக் கொண்டிருந்த கடின உழைப்பு, அவனுடைய குடும்ப வாழ்க்கையுடன் நாளடைவில் முரண்படத் தொடங்கியதை அவன் உணரவில்லை.

தவனுக்கு தனது மனைவியுடனும் மகன்மார்களுடனும் செலவிட நேரம் இல்லாமல் போய்விட்டது. இதைப்பற்றி நான் பலமுறை அவனிடம் எடுத்துக் கூறியிருக்கின்றேன். ஆனால், அவன் அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டான்.

தவனுடைய வாழ்க்கைமுறை அவனுடைய மனைவியை மிகவும் பாதித்திருக்க வேண்டும். அவள் எமது நாட்டு மக்களுடன் பெரிதாகப் பழகியவளல்ல. எமது வாழ்க்கை முறைக்கும் அவளால் முழுமையாகப் பழகிக்கொள்ள முடியவில்லை. அதற்கு மேலாக, தவன் அவளுடன் செலவிடும் நேரம் மிகவும் குறைவாகவே இருந்தது.

இதனால் அவள் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாள் என்பதை நான் அப்போது உணர்ந்துகொண்டேன். கடைசியில், அவள் தன்னை ஒரு கோவிலின் பணிகளில் ஈடுபடுத்திக்கொண்டாள். தனது பெரும்பாலான நேரத்தை கோவிலிலும், கோவில் சார்ந்த வேலைகளிலும் செலவிடத் தொடங்கினாள்.

அவள் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட குறைகளையும் ஏமாற்றங்களையும் மறைப்பதற்காகவோ, அல்லது அவற்றை மறந்துவிடுவதற்காகவோ கோவில் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டிருக்கலாம் என்று நான் நினைத்தேன்.

இதுபற்றியும் நான் பலமுறை தவனிடம் எடுத்துக் கூறினேன். ஆனால், தவன் அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டான்.

பொதுவாக, எமது நாட்டில் பிறந்து வளர்ந்த மக்களின் குறிப்பாக ஐரோப்பிய வாழ்க்கை முறையைப் பின்பற்றும் மக்களின் வாழ்க்கை ஓரளவு மெதுவான போக்கைக் கொண்டது. அவர்கள் வாழ்க்கையை அதிகமான மன அழுத்தமின்றி, மகிழ்ச்சியாக அனுபவித்து வாழ விரும்புவார்கள்.

விடுமுறை நாட்கள் என்றால் கடற்கரைக்குச் செல்வது, பனிச்சறுக்கல் செய்வது, மீன்பிடித்தல், வேட்டையாடுதல் போன்ற பொழுதுபோக்குகளில் தங்கள் நேரத்தைக் கழிப்பார்கள். வேலைக்கும் வாழ்க்கைக்கும் இடையில் ஒரு சமநிலையைப் பேணுவதில் அவர்கள் அதிக கவனம் செலுத்துவார்கள்.

இந்த நாட்டின் சூழ்நிலைக்கும் கலாசாரத்திற்கும் ஏற்ப வளர்ந்த தவனுடைய மகன்மார்களும், இந்த நாட்டு மக்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்பத் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்டனர்.

அவர்களுடைய வாழ்க்கை தவனுடைய வாழ்க்கையிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது.

தவனின் முதலாவது மகன் வைத்தியத் துறையில் படித்தான். உண்மையில், அந்தத் துறையில் படிப்பதற்கு அவனுக்கு விருப்பம் இருக்கவில்லை. ஆனால், தவனின் வற்புறுத்தலின் பேரிலேயே அவன் வைத்தியத் துறையைத் தேர்ந்தெடுத்துப் படித்தான்.

படிப்பை முடித்து பட்டச் சான்றிதழைப் பெற்றதும், அதைக் கொண்டுவந்து தவனின் கையில் கொடுத்துவிட்டு, “நீங்கள் நினைத்தபடி இதோ, நான் டாக்டராக வந்துவிட்டேன். ஆனால், நான் டாக்டராக வேலை செய்யப்போவதில்லை”.  என  கூறிவிட்டு, வைத்தியத் துறையை விட்டு இசைத் துறையில் நுழைந்து, ஒரு பாடகனாகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டான்.

இரண்டாவது மகன் தவனின் விருப்பத்தைப் பொருட்படுத்தாமல், தனக்குப் பிடித்த பாதையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டான். அவன் பிளம்பிங் தொழிலைக் கற்றுக்கொண்டு, ஒரு பிளம்பராக வேலை செய்யத் தொடங்கினான். சில வருடங்கள் அந்தத் தொழிலில் அனுபவத்தைப் பெற்ற பின்னர், தனக்கென்று ஒரு பிளம்பிங் நிறுவனத்தை ஆரம்பித்தான்.

மூன்றாவது மகனும் தவனுடைய விருப்பத்திற்கேற்ப தனது வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவில்லை. அவன் தனக்குப் பிடித்த தலைமுடி அலங்காரத் தொழிலைத் தேர்ந்தெடுத்துக்கொண்டான். அந்தத் துறையிலும் அவன் நன்றாக முன்னேறினான்.

தொடரும்….

யோர்ச் அருளானந்தம்  ONZM  QSM JP – Auckland

 

Facebook Comments Box

ශ්‍රීLankaNZ සමාජ සත්කාරය අඛණ්ඩවම පාඨකයන් වෙත රැගෙන එන්නට ඔබගේ කාරුණික දායකත්වය අත්‍යාවශ්‍යමය. එය ස්වෙච්ඡා සේවක කණ්ඩායමට මෙන්ම පුවත්පතට ලිපි සපයන සම්පත් දායකයින්ට ද ඉමහත් ධෛර්යයක්වනු ඇත. ශ්‍රී ලන්කන්ස් පුවත්පතේ ඉදිරි ගමනට අත දෙන්න.

BECOME A SUPPORTER
- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img
spot_img

Latest article

Consider a contribution…

ශ්‍රී LankaNZ(ශ්‍රී ලංකන්ස්) is a free distributed Sri Lankan Community Newspaper that aims to reach a Sri Lankan population all over New Zealand. If you would like to appreciate our commitment, please consider a contribution.