பண்டைய தமிழர் வாழ்விற்கு இன்றியமையாதது பொருள் என்று கருதினர். உயிர் வாழ்வதற்குத் தேவையா ன கூறுகளாக உள்நாட்டுப் பொருள்களையும், அயல்நாட்டுப் பொருள்களையும் கருதலாயினர். அத்தகைய பொருள்களைப் பெறச் சோம்பல் இல்லாமல் கடுமையாக உழைத்து வளம் சேர்த்தனர். இம்முயற்சியின் ஒரு கூறாக,
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு (கொன்றை வேந்தன்,39)
என்ற முதுமொழிக்கு ஏற்பக் கடல் கடந்த நாடுகளுடன் வாணிபம் செய்து பொருள் ஈட்டினர். பழந்தமிழர்கள் மலைகளுடனும், காடுகளுடனும், கடலுடனும் கலந்து உறவாடினார்கள். இவர்கள் பண்டைக் காலத்திலேயே அயல்நாடுகள் பலவற்றுடன் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தனர். இதற்கான சான்றுகளை அயல்நாட்டுக் குறிப்புகளைக் கொண்டும், நம்முடைய பழைய இலக்கியங்களில் காணப்படும் குறிப்புகளைக் கொண்டும் அறிந்து கொள்ளலாம்.
அயல்நாட்டுக் குறிப்புகள்
பழந்தமிழர்கள் மேற்கே கிரீஸ் (கிரேக்கம்), ரோமாபுரி, எகிப்து முதல் கிழக்கே சீனா வரையில் கடலோடிப் பிழைத்தார்கள். இந்நாடுகள் மட்டுமின்றிப் பாலஸ்தீனம், மெசபடோமியா, பாபிலோனியா போன்ற மேலை நாடுகளுடனும் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தார்கள். மேலும் வடஇந்திய நாடுகளுடனும் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தார்கள்.
தமிழகத்துப் பண்டங்களான ஏலம், இலவங்கம், இஞ்சி, மிளகு ஆகியவற்றிற்கு மேற்கு ஆசிய நாடுகளில் மிகுந்த தேவை ஏற்பட்டது. இதனைக் கருத்தில் கொண்ட பழந்தமிழர்கள் இவை போன்ற பொருள்களை அந்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தனர்.
இலவங்கம்
யூதர்களின் ஆதி சமயத் தலைவர் மோசஸ் (Moses) என்பவர், தாம் நிகழ்த்தி வந்த இறைவழிபாட்டில் ஏலக்காயைப் பயன்படுத்தினார் என்று பழைய ஏற்பாடு (Old Testament) கூறுகிறது. மோசஸ் கோயில் கட்டி வழிபாடு செய்தது கி.மு. 1490இல் என்பர்.
தென் அரேபியா நாட்டு அரசி ஷீபா(Sheba), இஸ்ரேல் நாட்டின் மன்னன் சாலமன் (Solomon) என்பவனைக் காணச் சென்றபோது, அவனுக்குப் பரிசாக ஏலக்காய், இலவங்கம் போன்ற நறுமணப் பண்டங்களைக் கொண்டு போனதாகப் பழைய ஏற்பாட்டில் ஒரு குறிப்புக் காணப்படுகிறது.
சாலமன் ஆண்ட காலம் கி.மு.1000 என்பர்.
சாலமனுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை சேரநாட்டுத் துறைமுகத்திலிருந்து கப்பல் மூலம் மயில் தோகை, அகில் மரங்கள், யானைத் தந்தம், குரங்குகள், வெள்ளி போன்ற பொருள்கள் கொண்டு செல்லப்பட்டன என்ற குறிப்பும் அறியப்படுகிறது.மேலே குறிப்பிட்ட சான்றுகளால் ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பழந்தமிழர் மேலை நாட்டாரோடு வாணிபத் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதை அறியலாம்.
பழந்தமிழ் இலக்கியக் குறிப்புகள்
கிரேக்கம், ரோமாபுரி ஆகிய நாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வந்த வாணிகர், தொழிலாளர் முதலானோரை யவனர் என்று பழந்தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. கிரேக்கர்கள் தங்கள் நாட்டையும், மொழியையும் அயோனெஸ் (Iaones) என்று கூறிக் கொள்வராம்.
அதுவே தமிழில் யவனர் எனத் திரிந்தது என்பர். ஆனால் அச்சொல் கிரேக்கர்களையும், ரோமர்களையும் ஒரு சேரக் குறிப்பதாக வழங்குகிறது. யவனர்களோடு வாணிபம் செய்த தமிழர்கள் அவர்களுடைய நாடுகளிலிருந்து தங்கத்தையும், மதுவையும் இறக்குமதி செய்தனர்.
தங்கத்தின் விலைப்பொருட்டாக மிளகினை ஏற்றுமதி செய்தனர். யவனர்கள் வாணிகர்களாக மட்டுமன்றி, தமிழக மன்னர்களின் அரண்மனையில் கைவினைக் கம்மியராகவும் (கம்மியர்- உலோக வேலை செய்பவர்), காவல்காரராகவும் பணிபுரிந்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள பெரிய துறைமுகப்பட்டினங்களில் யவனர்களுக்குத் தனி இருப்பிடங்கள் இருந்தன. இவை போன்ற குறிப்புகள் சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் காணப்படுகின்றன.
பொன்னொடு வந்து மிளகொடு மீளுதல்
முசிறி என்னும் சேரநாட்டுத் துறைமுகப்பட்டினத்தில், யவனர்களின் மரக்கலங்கள் பொன்னைக் கொண்டுவந்து கொட்டிவிட்டு, அதற்கு விலையாக மிளகு மூட்டைகளை ஏற்றிச் செல்வதாக அகநானூறு குறிப்பிடுகிறது.
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளங்கெழு முசிறி (அகநானூறு, 149:9-11) (நன்கலம் = நல்ல கப்பல்; கறி = மிளகு)
மதுவை இறக்குமதி செய்தல்
யவனர்கள் நல்ல மரக்கலங்களில் கொண்டுவந்த குளிர்ச்சி பொருந்திய நறுமணமிக்க மதுவை, ஒளி பொருந்திய வளையல்கள் அணிந்த இளம்பெண்டிர், பொன்னால் செய்யப்பட்ட கிண்ணங்களில் ஊற்றித் தர, அவ்வினிய மதுவை நாள்தோறும் பருகி மாறன் என்னும் பாண்டிய அரசன் களிப்புடனும், அமைதியுடனும் வாழ்ந்தான் எனப் புறநானூறு கூறுகின்றது.
யவனர், நன்கலம் தந்த தண்கமழ் தேறல்
பொன்செய் புனைகலத்து ஏந்தி நாளும்
ஒண்தொடி மகளிர் மடுப்ப மகிழ்சிறந்து
ஆங்குஇனிது ஒழுகுமதி ஓங்குவாள் மாற
(தேறல் = மது; ஒண்தொடி=ஒளி பொருந்திய வளையல்; மடுப்ப=ஊற்றித் தர) 56: 18-21)
கைவினைக் கம்மியர்
யவனர்கள் செய்த நல்ல வேலைப்பாடு அமைந்த பாவை தனது கையில் ஏந்தியிருக்கும் அழகிய அகன்ற விளக்கு நிறையும்படி எண்ணெய் ஊற்றினர் என நெடுநல்வாடை கூறுகிறது.
யவனர் இயற்றிய வினைமாண் பாவை கைஏந்து ஐ அகல் நிறைய நெய்சொரிந்து (நெடுநல் வாடை: 101-102) (ஐ = அழகிய; நெய் = எண்ணெய்)
காவல்காரர்கள்
யவனர்கள் பாண்டிய மன்னனின் அரண்மனையில் காவல் மிக்க கோட்டை வாசலைக் கொலைவாள் ஏந்திக் காவல் காத்து நின்றதைச் சிலப்பதிகாரம் கூறும்
கடிமதில் வாயில் காவலிற் சிறந்த அடல்வாள் யவனர் (சிலம்பு ஊர்காண்.. 6566)
யவனர் இருக்கை
பண்டைய தமிழகத்தில் கீழைக் கடற்கரையில் அமைந்திருந்த பெரிய துறைமுகம் காவிரிப்பூம்பட்டினம். இங்கு அயல்நாட்டு வாணிகம் செழித்திருந்தது. இப்பட்டினத்தில் கடற்கரையை ஒட்டி யவனர்களுக்கு என்று ஒரு தனி இருப்பிடம் இருந்தது. அது காண்போரை மேற்செல்ல விடாமல் தடுக்கும் அளவிற்கு அழகுடையதாக விளங்கியது எனச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.
காண்போரைத் தடுக்கும் பயனறவு அறியா யவனர் இருக்கை (சிலம்பு, இந்திர 9-10)
உதவிய நூல் :
“சங்க காலம்” முனைவர் அ. ஜேம்ஸ் அறிவுரைஞர், தமிழ் இணையப் பல்கலைக்கழகம்
By Dr. Luxman Shocklingam