In the 1420s, a ship departed from Trincomalee, heading toward Indonesia was caught in a violent storm and all on board perished—except for the captain, Maravarman. He was rescued by a Māori canoe and brought to Whangārei, where he slowly adapted to their way of life. Later Maravarman met Anahera, the young daughter of a chief.
The writer unfolds the connecting story of Maravarman, Anahera and the Tamil Bell, one of the artifacts preserved at Te Papa museum, Wellington.
மறவர்மன் மிகவும் களைப்படைந்து விட்டான். அந்த உடைந்து போன கப்பலில் உயிருக்காக போராடிக் கொண்டிருக்கிறான். அவனோடு கூட வந்த மாலுமிகள் எல்லோரையும் புயலும், கடலும் விழுங்கி விட்டது. ஈழநாட்டின், திருகோணமலையிலிருந்து சுவர்ணதீபாவுக்கு (தற்போதைய இந்தோனேசியா) சரக்குகளுடன் சென்ற கப்பல், இடைவழியில் புயலுக்குள் மாட்டிக்கொண்டது. கப்பல் பாறை ஒன்றுடன் மோத மாலுமிகள் எல்லோரும் கடலுக்குள் தூக்கி வீசப்பட்டார்கள். மறவர்மன் கப்பலுக்குள்ளேயே வீசப்பட்டு தலையில் அடிபட்டு மயங்கி விட்டான்.
மயக்கம் தெளிந்து பார்த்தபோது கப்பல் அலைகளோடு இழுபட்டு பல தூரம் சென்று விட்டதையும், மாலுமிகள் எல்லோரும் கடலுக்குள் மூழ்கி விட்டதையும் அறிந்து கொண்டான்.
கப்பல் உடைந்து இருந்தாலும் தொடர்ந்து கடலுக்குள் மிதந்து கொண்டிருந்தது. கடந்த மூன்று நாட்களாக அவன் கப்பலுக்குள் தத்தளித்துக் கொண்டிருக்கின்றான். தன்னோடு வேலை செய்த மாலுமிகளை, நண்பர்களை இழந்த துக்கமும், கப்பலோடு விழுபட்டுச் செல்வதும் களைப்பும், உடல் அசதியையும் தோற்றுவித்தன.
கப்பல் தென்கிழக்கு திசையை நோக்கி அலைகளுடன் இழுபட்டுக் கொண்டிருந்தது. எங்காவது ஒரு இடத்தில் கரை ஏதாவது தெரிகிறதோ என்ற ஏக்கத்துடன் நான்கு திசையையும் பார்த்துக் கொண்டிருந்த மறவர்மன், தன்னை அறியாமலே தூங்கிவிட்டான்.
விளங்காத பாசையில் மனிதக் குரல் ஒலிகள் கேட்க கண்ணை விழித்துக் கொண்டான் மறவர்மன். தான் காண்பது கனவோ என நினைத்துக் கொண்டான். ஒரு ஒடுங்கிய நீண்ட கப்பல் அதனுள் மிகவும் திடகாத்திரமான மனிதர்கள். அவர்கள் உடல் முழுவதும் பச்சை குத்தப்பட்டு இருந்தது. முகங்களில் கூட பச்சை குத்தி இருந்தார்கள்.
அதில் இருவர் கைகளை நீட்டி அவன் கப்பலுக்குள் ஏறுவதற்கு உதவி செய்தார்கள். மறவர்மன் தன்னுடைய கப்பலில் இருந்த மணியையும், தன்னுடைய புல்லாங்குழலையும் எடுத்துக்கொண்டு கப்பலுக்குள் ஏறினான். அவனுடைய உள்ளம் மகிழ்ச்சியால் பொங்கியது. இந்தக் கடலுக்குள்ளேயே இறந்து விடுவேன் என்று நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு இந்த இனம் தெரியாத மக்கள் உதவி புரிகிறார்கள்.
கப்பலில் ஏறியவனை ஒரு இடத்தில் அமர வைத்து ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் கொடுத்தார்கள். மறவர்மன் நினைத்துக் கொண்டான் இவர்கள் அனுபவம் மிக்க மாலுமிகளாக இருக்க வேண்டும் கடலில் தத்தளித்து வந்தவனுக்கு பெரிய அளவில் தண்ணீர் கொடுக்கக் கூடாது. அது அவர்களுக்கு தெரிந்திருக்கிறது
சிறிது நேரத்தின் பின் அவனுக்கு அந்தக் கப்பலில் இருந்த ஒருவன் ஒரு பாத்திரத்தில் உணவு பரிமாறினான். அது ஒரு சுட்ட கிழங்கு. அதை சாப்பிட்ட போது, ஈழ நாட்டில் உள்ள வத்தாளைக் கிழங்கின் ருசி தெரிந்தது. ஆனால் இந்த கிழங்கின் அளவு கொஞ்சம் பெரிதாக இருந்தது.
அந்த உணவைப் பரிமாறியவன் அந்தக் கப்பலுக்குத் தலைவன் போல் தெரிந்தது அவனுக்கு மறவர்மனின் வயது இருக்கலாம் மிகவும் திடகாத்திரமாக இருந்தான். அவர்கள் அவனோடு கதைக்க முற்பட்டார்கள். அவன் இயன்ற அளவு அவர்களுக்குப் பதிலளிக்க முயற்சித்தான். ஆனால் அவர்களால் அவன் கதைத்ததையோ, அவனால் அவர்கள் கதைத்ததையோ விளங்கிக் கொள்ள முடியவில்லை.
இரண்டு நாட்கள் கழிந்தன மறவர்மனுக்கு களைப்பு நீங்கி, உடம்பில் ஒரு உற்சாகமும் தெம்பும் ஏற்பட்டது. அவன் அந்த மாலுமிகளோடு மிகவும் பரிச்சமாய் விட்டான். அவர்கள் கதைப்பது அவனுக்கு விளங்காவிட்டாலும்,, அவன் கதைப்பது அவர்களுக்கு விளங்காவிட்டாலும், பல விடயங்களை அவர்களோடு பழகியதில் இருந்து விளங்கிக் கொண்டான்.
அவர்கள் “ஔரேயறோவா”” என்ற நாட்டைச் சேர்ந்த மௌவுறி இன மக்கள். ஔரேயறோவா என்பது நீண்ட வெள்ளை முகில்களின் நிலம் என்று பொருள்படும். இவர்கள் வடக்கே உள்ள சிறிய தீவுகளில் இருந்து இந்த பெரிய நாடான ஔரேயறோவாக்கு பல நூறு வருடங்களுக்கு முன் வந்து குடியேறியுள்ளார்கள். இந்த மாலுமிகள் வடக்கே இருக்கும் தங்கள் மூதாதையருடைய தீவுகளுக்கு சென்று விட்டு திரும்பவும் தங்கள் நாட்டை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுடைய கப்பலை “வக்கா” என்று அழைப்பார்கள். அந்த கப்பல் 25 முழ நீளம் இருக்கும். ஈழ நாட்டுக் கப்பல்களை விட மிகவும் வித்தியாசமாக இருந்தது. அதனுடைய அமைப்பு ஓரலாகவும், நீண்டதாகவும் இருந்தது. பல மாலுமிகள் சுக்கான்களை பாவித்து அந்த கப்பலை ஓட்டுகிறார்கள். அந்தக் கப்பலில் 18 சுக்கான் ஓட்டிகள் இருந்தார்கள். அதைவிட ஏழு பேர் மேலதிகமாக இருந்தார்கள்.
மாலுமிகளின் முகங்களும், உடல் அமைப்பும் தமிழர்களை விட வித்தியாசமாக இருந்தது. தமிழர்களின் தோலோடு மஞ்சள் கலந்த ஒரு நிறம் அவர்களின் நிறமாக இருந்தது. அந்தக் கப்பலில் மாலுமிகளுக்கு தலைமை தாங்கியவனின் பெயர் “கரடா”.
மறவர்மன் அவர்களுக்கு பல விதத்தில் உதவி செய்யத் தொடங்கினான். சுக்கான் வலிப்பது தொடக்கம் சமைப்பது போன்ற வேலைகளில் அவர்களுக்கு உதவி புரிந்தான்.
அடுத்த மூன்று நாட்களில் கப்பல் கரையை அடைந்தது. மாலுமிகளின் உறவினர்களும், இனத்தவர்களும் கரையிலே வரிசையாக நின்றார்கள். மாலுமிகள் இறங்கியதும் கைகளை உயர்த்தியும், கண்களைப் பிரட்டியும், நாக்கை நீட்டியும் தங்களுடைய பாசையில் ஓசையை ஒலிப்பினார்கள். அதைப் பார்க்க ஏதோ சண்டைக்கு தயாராகுவது போல் இருந்தது. மறவர்மன் பயந்து போனான். ஆனால் பின்னர் அதுதான் அவர்களுடைய வரவேற்பு முறை என அறிந்து கொண்டான். அதை வரவேற்பு முறை “கக்கா” என்று அவர்கள் அழைத்தார்கள்.
அவர்கள் அவனை “மறாய்” என்று அழைக்கப்படும் குடிலுக்கு அழைத்துச் சென்றார்கள். அந்த மறாய் மரத்தினால் செய்யப்பட்ட ஒரு பெரிய குடிலாக இருந்தது. இந்த மக்கள் எல்லோரும் கூட்டுக் குடும்பமாக இந்த மறாயில் வாழ்கிறார்கள்.
மறாயின் வடிவமைப்பு மிகவும் அழகாக இருந்தது. மரங்களால் நேர்த்தியாக செதுக்கப்பட்டிருந்தது. சிற்பவேலை ஈழ நாட்டு சிற்பவேலையை விட மிகவும் வித்தியாசமாக காணப்பட்டது. மறாயின் முன்புறத்தில் முகம் ஒன்று செதுக்கப்பட்டிருந்தது. இது அவர்கள் இனத்தின் மூதாதையரின் முகத்தை குறிப்பதாக இருந்தது. முகத்தில் இருந்து கூரையைத் தாங்குவதற்காக, இருபக்கமும் கீழே செல்லும் இரண்டு நீண்ட மரங்கள் மூதாதையரின் கைகளைக் குறிக்கின்றன. கட்டிடத்தின் முழுப் பகுதியையும் தாங்கி நிற்கிக்கும் தூண்கள் கால்களைக் குறிக்கின்றன.
கரடா, மறவர்மனை அவர்களுடைய தலைவரிடம் அழைத்துச் சென்றான். அவர்களுடைய தலைவர் இவர்கள் இனத்தில், ஈழ நாட்டின் சிற்றரசருக்கு ஒப்பானவர் போல் இருந்தார். அவர் தோலினாலும், மிருகமென் மயிர்களாலும் உருவாக்கப்பட்ட மேலங்கி ஒன்றை அணிந்திருந்தார். அது தலைவருக்குரிய உடையாகும் மற்றவர்கள் அணிய முடியாது. மௌவுறி மக்கள் தங்கள் தலைவர்களை “ரங்கரிறா” என்று அழைத்தார்கள்.
தலைவர் “கி ஓறா” எனக்கூறி, தன்னுடைய மூக்கை அவனுடைய மூக்குடன் முட்டி அவனை வரவேற்றார். கி ஓறா என்பது ஈழத்தில் வணக்கம் என்ற சொல்லுக்கும், மூக்குகளை முட்டுவது கைகூப்பி வணக்கம் செய்வதற்கும் ஒப்பாகும். இதை “கொன்யி” என்று அழைப்பார்கள். தலைவர் அவனுடன் மிகவும் அன்பாக கதைத்தார். அவன் கதைத்ததை பெரிய அளவில் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும், அவன் வடமேற்கு பக்கம் உள்ள ஒரு நாட்டிலிருந்து வந்திருக்க வேண்டும் என்பதை அவர் தெரிந்து கொண்டார். ஆனால் அவருக்கு ஈழநாடு என்று தேசம் இருப்பதை பற்றி பெரிதாக தெரியவில்லை.
அவனுக்கு அந்த மறாயில் ஒரு சிறிய இடம் ஒதுக்கி கொடுக்கப்பட்டது. அவனுக்கு தனிப்பட்ட தேவைக்குரிய பாத்திரங்கள் மற்றும் உபகரணங்கள் கொடுத்தார்கள்.
மக்கள் எல்லோரும் அவனுடன் அன்பாகவும் பண்பாகவும் பழகினார்கள். மறவர்மன் மெல்ல மெல்ல அவர்களுடைய பழக்கவழக்கங்களைக் கற்று, அவர்களுடைய பாசையை பழகி அவர்களில் ஒருவனாக மாறிக்கொண்டிருந்தான்.
மௌவுறி இன மக்கள் தாங்கள் முதல் முதலில் வந்த கப்பலின் தலைவர்களின் பெயரைக் கொண்டு தங்களைக் குழுக்களாக பிரித்து, கப்பலின் தலைவர்களின் பெயர்களை தங்கள் குழுவுக்கு விட்டு இந்த நாட்டில் வாழ்ந்து வருகிறார்கள். மறவர்மன் வாழ்ந்து வரும் குழுவுக்கு “ரே பரபௌ” என்று பெயர். இவர்கள் “ரே பரபௌ” என்ற கப்பலில் வந்த தலைவரின் வாரிசைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பங்கறே என்ற நகரத்தின் தெற்கு பகுதியில் வாழ்ந்து வருகிறார்கள்.
பெண்கள் பிள்ளைகளை பராமரிப்பதிலும், நெசவு போன்ற வேலைகளில் ஈடுபட்டு உடைகள் செய்வதிலும் ஈடுபடுவார்கள். அவர்கள் துணிகள் தயாரிக்க தோல்களையும், புற்கள் போன்ற தாவரங்களையும், மற்றும் பறவைகளின் இறகுகளையும் பயன்படுத்தினர். “கறகெகெ” என்ற செடியின் தாள்களை ஈழ நாட்டின் ஓலைகள் போல், கூடைகள், பாய்கள் மற்றும் கயிறுகள், மீன்பிடி வலைகளை செய்ய பயன்படுத்தப்பட்டன.
ஆண்கள் பொதுவாக, மீன்பிடித்தல் மற்றும் வேட்டையாடுதல் போன்ற வேலைகளில் ஈடுபட்டு மறாயில் உள்ளவர்களுக்கு உணவுகளை சேகரிப்பார்கள். கரடா அவனுக்கு ஆற்றில் விலாங்கு மீன் பிடிப்பதற்கு பழக்கி கொடுத்தான். கடலில் மீன் பிடிப்பதற்கு கற்றுக் கொடுத்தான். காட்டில் வேட்டையாட காட்டிக் கொடுத்தான். கரடாவும் அவனும் மிகவும் நெருங்கிய நண்பர்களாகினர். மறவர்மன் மற்ற ஆண்களுக்கும் அவர்களது வேலையில் உதவி புரிந்தான். இரவு நேரங்களில் தனது புல்லாங்குழலை வாசித்து மறாயில் உள்ள மக்களை மகிழ்வித்தான்.
அவர்கள் வாழும் பகுதிக்கு தெற்கே, “கரெய” ஆற்றின் மறுபக்கம், தெற்கு பங்கறேயில் “ஞாய் ரகுகு ” என்ற மௌவுறி குழு வாழ்ந்து வந்தது. ஒரு நாள் அவர்களுக்கும் இந்த குழுவுக்கும் இடையில் ஒரு சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அவர்களை சந்திக்க வடக்கிலிருந்து, இந்த குழுவின் தலைவர், அவர்களின் மறாய்குச் சென்றார். அவர் செல்லும் போது கரடாவையும், மறவர்மனையும், ஒரு சில முக்கியத்தவர்களையும் அங்கு அழைத்துச் சென்றார்.
அங்கு சென்றபோது அந்தக் குழுவின் தலைவர் அவருடைய மகளை இவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அவளுடைய பெயர் “அனகெர”. மிகவும் அழகிய பெண். அவளுடைய நீண்ட கண்களும், அழகிய உதடுகளும் அவள் முகத்துக்கு ஒரு கவர்ச்சியைக் கொடுத்தன. அவள் நாடியில் குத்தி இருந்த பச்சை அவளுக்கு இன்னொரு அழகை கொடுத்தது. அனகெர என்ற பெயரின் கருத்து தேவதை. அவள் பாப்பதற்குத் தேவதை போன்றே இருந்தாள். அவள் மறவர்மனை பார்த்து புன்முறுவல் செய்தாள். அவளுடைய கண்களும் சிரித்தன. அவன் அவளோடு கதைக்க முற்பட்டான். அவளும், அவனோடு கதைக்க முற்பட்டது போல் தோன்றியது. ஆனால் இருவராலும் ஒருவரோடு ஒருவர் கதைத்துக் கொள்ள முடியவில்லை.
மறாய் வந்து சேர்ந்த அவனுக்கு, அவளை மறக்க முடியவில்லை. அவளின் நினைவுகள் எப்பொழுதும் தோன்றி மறைந்தன. அவள் தனக்கு கிடைக்காளோ என்று அவனது உள்ளம் ஏங்கியது. அடிக்கடி தூக்கத்தை இழந்தான்.
கரடா, அவனின் ஏற்பட்ட இந்த மாற்றத்தை கவனித்துக் கொண்டான். அவன் அன்புடன் மறவர்மனை அணுகி அவனுக்கு ஏதாவது பிரச்சனையா என கேட்டான். மறவர்மன் தனது ஏக்கத்தை கரடாவுக்கு விளங்கப்படுத்தினான்.
கரடா கூறினான் “அனகெர மிகவும் நல்ல பெண். அவள் ஒரு அழகியும் கூட. அவள் எல்லாவிதத்திலும் உனக்கு ஏற்றவள். ஆனால் அவளின் தந்தை மிகவும் கோபக்காரர், பொல்லாதவர். அவர் இதை ஏற்றுக் கொள்வாரோ தெரியவில்லை. எனினும் முதலில் அவள் உன்னை விரும்புகிறாரோ என்பதை நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்”.
மறவர்மன் பதிலளித்தான் “அவள் என்னை பார்த்த விதத்திலும், அவள் என்னைப் பார்த்து புன்முறுவல் செய்த விதத்திலும், நிச்சயமாக அவள் என்னை விரும்புகிறாள் அன்றே நான் நம்புகிறேன்”
“நன்று, நீ நாளை மாலை நேரம் ஆற்றங் கரைக்குச் சென்று உன்னுடைய புல்லாங்குழலை இசை. நான் ஆற்றின் மற்றய கரைக்கு அவள் வருவதற்க்கு ஏற்பாடு செய்கிறேன். அவள் உன்னை விரும்பினால், உன் இசையை இரசிப்பாள். மீண்டும் அடுத்த நாள் நீ வாசிக்கும் போது திரும்பவும் வருவாள். உன்னை உண்மையிலேயே காதலிப்பாலானால், ஒரு நாள் நிச்சயமாக ஆற்றை கடந்து உன்னை வந்து சந்திப்பாள்”.
மறவர்மன் கரடா சொன்னதை ஏற்றுக் கொண்டான். அவன் கூறியபடியே அடுத்த நாள் ஆற்றங் கரைக்குச் சென்று தன் புல்லாங்குழலை இசைத்தான். சிறிது நேரம் கழித்து கரையின் மறுபக்கம் அனகெர வந்தாள். அவன் வாசிப்பதையே பார்த்துக் கொண்டு நின்றாள். அவனுடைய இசையை அவள் இரசிப்பது போல் அவனுக்கு தோன்றியது. நேரம் செல்ல இருவரும் தங்கள் தங்கள் திசையில் தங்களது மறாயை நோக்கித் திரும்பினார்கள்.
தொடர்ந்து மாலை நேரங்களில் ஆற்றின் கரைக்குச் சென்று தனது புல்லாங்குழலை இசைத்தான். அனகெரவும் மறுகரைக்கு வந்து அவனுடைய இசையை கேட்டு இரசித்தாள். நாட்கள் கழிந்தன. ஒரு நாள் அவன் புல்லாங்குழலை வாசித்துக் கொண்டிருந்தபோது, அவள் திடீரென ஆற்றுக்குள் இறங்கி அவனது கரையை நோக்கி நீந்தி வந்தாள். மறவர்மனின் உள்ளம் மகிழ்ச்சியால் பொங்கியது. அவள் கரைக்கு வந்ததும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். கண்கள் பேசின. அதற்குப் பிறகு சிறுது நேரம் அவனுடன் கதைத்து விட்டு அவள் திரும்பிச் சென்று விட்டாள்.
அவன் வேகமாக ஓடிச் சென்று நடந்ததை கரடாவிடம் கூறினான். மறவர்மன் மிகவும் ஆனந்தமாக இருப்பதை கண்டு கரடா மகிழ்ச்சி அடைந்தான். அவன் மறவர்மனிடம் கூறினான். “மிகவும் நன்று உனக்கு எனது வாழ்த்துக்கள். அவள் உனக்கு மிகவும் ஏற்ற பெண். ஆனால் நான் முன் கூறியது போல் அவளின் தந்தையையிட்டு கவலைப்படுகிறேன். அவர் இதை ஏற்றுக் கொள்வாரோ தெரியவில்லை. இது எங்களது குழுவுக்கும், அவரது குழுவுக்கும் இடையே ஒரு மிகப்பெரிய பிரச்சனையைக் கூட உருவாக்கலாம். இருந்தாலும் நாங்கள் பொறுத்திருந்து பார்ப்போம்”.
Next issue. How Marawarman and Anahera got together, married and settled down in Sri Lanka.
யோர்ச் அருளானந்தம் ONZM QSM JP







